மதுரை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உயிரிழந்த பூரணச்சந்திரனின் தியாகத்தைப் போற்றும் வகையிலும், அவரது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையிலும் பாரதிய ஜனதா கட்சியின் அயலகத் தமிழர் பிரிவு சார்பில் நிதியுதவி வழங்கும் நெகிழ்ச்சியான நிகழ்வு மதுரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மறைந்த பூரணச்சந்திரனின் மனைவி இந்து பூரணச்சந்திரன் மற்றும் அவரது மகன்கள் சிவனேஷ், இனியன் ஆகியோரது எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பெயரில் 2 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்புத்தொகையாக வழங்கப்பட்டது. முன்னதாக, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம. சீனிவாசன், பூரணச்சந்திரனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, வைப்புத்தொகைக்கான சான்றிதழை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துப் பேசிய அவர், திமுக அரசின் பாரபட்சமான போக்கினை மிகக் கடுமையாகச் சாடினார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் பூரணச்சந்திரன் செய்த உயிர்த்தியாகம் ஈடு செய்ய முடியாதது என்றும், அந்த இழப்பு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் குறிப்பிட்ட பேராசிரியர் இராம. சீனிவாசன், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை திமுக அரசு முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறக்கூட ஒரு அமைச்சரோ அல்லது திமுகவின் முக்கியத் தலைவர்களோ வராதது கண்டிக்கத்தக்கது என்றும், இதே சம்பவம் ஒரு சிறுபான்மையினக் குடும்பத்தில் நடந்திருந்தால் இந்நேரம் திமுக அரசு அங்கு உதவிகளைக் குவித்திருக்கும் என்றும் ஆதங்கப்பட்டார். பெரும்பான்மை மக்களைப் புறக்கணித்து, வாக்கு வங்கி அரசியலுக்காகச் சிறுபான்மையினரை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் திமுகவிற்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
இந்த முக்கிய நிகழ்வில் பாஜக அயலகப் பிரிவு மாநிலத் தலைவர் கே.எம். சுந்தரம், மாநகர் மாவட்டத் தலைவர் மாரிச்சக்கரவர்த்தி, அயலகப் பிரிவு மாநிலச் செயலாளர் நடிகர் ரிஷி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாநில நிர்வாகிகள் அன்பு ரமேஷ், கொண்டல் சுவாமி, பாஸ்கர், அயலகப் பிரிவு மதுரை மாவட்டத் தலைவர்கள் தங்கம், ஞானசுந்தரம், மதுரை கிழக்கு ராதாகிருஷ்ணன் மற்றும் கருட கிருஷ்ணன், மார்க்கெட் கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட மாநில, மண்டல நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு பூரணச்சந்திரனின் குடும்பத்திற்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். திமுக அரசின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளைக் கண்டிக்கும் களமாகவும், ஒரு சாதாரணத் தொண்டனின் குடும்பத்தைப் பாதுகாக்கும் பாஜகவின் அரணாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

















