மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் வீடு புகுந்து கஞ்சா போதை ஆசாமிகள் தாக்கியதாக குற்றச்சாட்டு. தந்தை, தாய், மகன் படுகாயம். ஆபத்தான நிலையில் தந்தை மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பனங்காட்டு தெருவில் கஞ்சா போதையில் ஒரு கும்பல் வீடு புகுந்து இளைஞரையும், அதை தடுக்க சென்ற தாய், தந்தையையும் கொடூரமாக தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பனங்காட்டு தெருவை சேர்ந்த அழகர்சாமி(61) என்பவரது மகன் ஐயப்பன் நேற்று இரவு சோழியத்தெருவில் இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று விட்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த சம்பந்தம்குளத்தைச் சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஐயப்பனின் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு சென்றதாகவும். இதனைப் பார்த்து ஐயப்பன் ஓடிச் சென்று ஹரியை பிடித்து அடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஹரி மற்றும் அவரது நண்பர்கள் 20க்கு மேற்பட்டோர் ஐயப்பன் வீட்டிற்கு வந்து ஐயப்பனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை தடுத்த ஐயப்பனின் தந்தை அழகர்சாமியை கட்டையால் முகத்தில் அடித்துள்ளனர். தாய் நீலாவதியின் மண்டையை உடைத்துள்ளனர். காயமடைந்த மூவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஐயப்பனின் தந்தை அழகர்சாமி மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டு அங்கிருந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ஐயப்பன் கூறுகையில் கஞ்சா போதையில் 20-க்கு மேற்பட்டோர் தன் குடும்பத்தினரை வீடு புகுந்து தாக்கியதாகவும் தன் வாகனத்தை திருட முயற்சித்ததால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டநிலையில் தன்னோடு சேர்ந்து தாய் தந்தையையும் கொடூரமாக தாக்கியதாக கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஐயப்பனின் உறவினர்கள் சித்தர்காட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

















