இன்று முதல் தனது பயணத்தை துவக்கிய, மயிலாடுதுறை வழியாக மேற்குவங்கம் மாநிலம் நியூஜல்பைகுரி செல்லும் அம்ரித் பாரத் ரயிலுக்கு மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரயில் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் :-
தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்து மேற்குவங்க மாநிலம் நியூஜல்பைகுரி வரையில் புதிய அமிர்த பாரத் ரயில் கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து தஞ்சை மயிலாடுதுறை வழியாக இந்த ரயில் மேற்குவங்க மாநிலத்திற்கு செல்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதி வடகிழக்கு பகுதிகளுடன் ரயில் மூலம் நேரடியாக இணைக்கப்படுகிறது. 14 முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயில் மூலம் ஏழை எளிய மக்கள் மிகவும் பயன் பெறுவர். இன்று முதல் சேவையை துவங்கிய ரயில் மயிலாடுதுறைக்கு வருகை புரிந்தது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் சார்பில் ரயிலுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் லோகோ பைலட் மற்றும் ரயில் பயணிகளுக்கு மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் சார்பில் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இதேபோல் திருநள்ளாறு வழியாக பயணிகள் ரயில் சேவையை துவக்க வேண்டும் என்று அப்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

















