தேனியில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்.டி.ஏ கூட்டணியில் இணைவதற்கான அழைப்பை விடுத்தார்.
தமிழகத்தை ஊழல் ஆட்சியில் இருந்து மீட்டு, அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். திமுக, உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்க காத்திருக்கிறது என்றும், ஊழல் என்றாலே திமுக தான் நினைவுக்கு வரும் என்றும் விமர்சனம் செய்தார்.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றும், போதைப் பொருள் கடத்தலுக்கான முக்கிய மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது என்றும் குற்றம்சாட்டினார். ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாகவும் கூறினார்.
நாங்கள் பிரிந்து தேர்தலை சந்தித்ததால் திமுக வெற்றி பெற்றது என்றும், ஒன்றாக போட்டியிட்டிருந்தால் மேலும் பல தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம் என்றும் தெரிவித்தார். அம்மாவின் தொண்டர்கள் ஒரே அணியில் திரள வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் விளக்கினார்.
என்.டி.ஏ கூட்டணியில் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் சரியான முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், தேனியில் இருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
“அம்மாவின் இடத்தில் எங்களுக்கு மோடி தான் இருக்கிறார். தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்ற அவருடன் இணைந்து செயல்படுவோம்” என்றார். தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், தன்னுடன் இருப்பவர்களுக்கு அமைச்சர்பதவி கிடைக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் கூறினார்.
மேலும், “ஸ்லீப்பர் செல் தற்போது லைவ் செல் ஆக மாறியுள்ளது” என விமர்சித்தார்.
நடிகர் விஜயை விமர்சித்த அவர், எம்ஜிஆர் படத்தை வைத்து எங்கள் கட்சியை ஊழல் கட்சி என கூறுவது தவறு என்றும், திரைப்படங்களில் நடைபெறும் கள்ள டிக்கெட் விற்பனை உள்ளிட்ட ஊழல்களை முதலில் தடுக்க வேண்டும் என்றும் கூறினார். விஜயகாந்த் போல தேர்தலில் தாக்கம் ஏற்படுத்துவார் என்றே கூறினேன்; எம்ஜிஆர் போல வருவார் என்று சொல்லவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

















