கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளர்களுக்கு கிலோவுக்கு ரூ.20 வளர்ப்பு கூலி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
கறிக்கோழியை கையில் ஏந்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளர்களுக்கு கிலோவுக்கு ரூ.20 வளர்ப்பு கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், கறிக்கோழி பண்ணை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் திரளாக பங்கேற்றனர். அவர்கள் கறிக்கோழிகளை கையில் ஏந்தியவாறு, வளர்ப்பு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தற்போதைய தீவன விலை உயர்வு, மின் கட்டணம், மருந்து செலவுகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, கிலோவுக்கு வழங்கப்படும் வளர்ப்பு கூலியை ரூ.20 ஆக உயர்த்தி நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
மேலும், வரவிருக்கும் கோடை காலம் காரணமாக கறிக்கோழி வளர்ப்பில் செலவுகள் மேலும் அதிகரிக்கும் என அவர்கள் தெரிவித்தனர். கடும் வெப்பத்தால் கறிக்கோழிகளை பாதுகாக்க கூடுதல் காற்றோட்ட வசதி, கூலிங் ஃபேன், தண்ணீர் தெளிப்பு அமைப்புகள், மின் செலவு உள்ளிட்ட கூடுதல் ஏற்பாடுகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் உற்பத்தி செலவு கணிசமாக உயரும் நிலையில், தற்போதைய கூலி போதுமானதாக இல்லை என்றும், கோடை கால சிரமங்களை கருத்தில் கொண்டு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், தனியார் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி குஞ்சுகளை இறக்கும் நடைமுறையால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக தெரிவித்தனர். குஞ்சுகள் வழங்கல், தீவன விலை நிர்ணயம், கொள்முதல் விலை உள்ளிட்டவற்றில் அரசு கண்காணிப்பு அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதோடு, கறிக்கோழி பண்ணைகளுக்கு குஞ்சுகளை கட்டாயமாக இறக்குவதை எதிர்த்து போராடிய காரணமாக கைது செய்யப்பட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் முருகசாமி உள்ளிட்டோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அரசு விவசாயிகள் மற்றும் கறிக்கோழி பண்ணை தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.














