தமிழக மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில், பால் மற்றும் பால் உபபொருட்களின் தரத்தைப் பரிசோதிக்க கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியில் உள்ள ஆவின் பால் நிறுவன வளாகத்தில் ரூ.47.05 லட்சம் மதிப்பீட்டில் புதிய நுண்ணுயிரியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன ஆய்வகத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்தார். தேசிய பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தின் (NPDD) கீழ், பால்வளத் துறையின் சார்பில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்த ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. கரூரில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் முன்னிலை வகித்து, ஆய்வகத்தின் செயல்பாடுகளைப் பார்வையிட்டார்.
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாலில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதை உறுதி செய்யவும், அதே வேளையில் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் நோய் பரப்பும் கிருமிகளைத் தொடக்க நிலையிலேயே கண்டறியவும் இந்த ஆய்வகம் ஒரு அரணாகத் திகழும். குறிப்பாக, பால் கெட்டுப்போகும் நிலையைத் துல்லியமாகக் கண்டறியும் அடிப்படைப் பரிசோதனைகள் மற்றும் பாலின் தரம், பாதுகாப்பு குறித்த விரிவான ஆய்வுகள் இங்கு மேற்கொள்ளப்படும். மேலும், ஆவின் நிறுவனத்தின் முக்கிய உபபொருட்களான தயிர், சீஸ் மற்றும் யோகர்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ‘லாக்டோபேசிலஸ்’ போன்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் தூய்மை மற்றும் அவற்றின் வீரியம் குறித்தும் இங்கு நவீன முறையில் பரிசோதிக்கப்படும்.
இந்த ஆய்வகத்தில் அறிவியல் ரீதியான பரிசோதனைகளை மேற்கொள்ள ஏதுவாக, இன்குபேட்டர் (Incubator), ஆட்டோகிளேவ் (Autoclave), நுண்ணோக்கி (Microscope) மற்றும் கிருமிகள் அற்ற சூழலை உருவாக்கும் லேமினார் ஏர் ப்ளோ (Laminar Air Flow) உள்ளிட்ட அதிநவீனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. பாலின் மூலம் மனிதர்களுக்குப் பரவக்கூடிய நோய்க்கிருமிகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்வதன் மூலம், நுகர்வோருக்குப் பாதுகாப்பான பால் கிடைப்பது நூறு சதவீதம் உறுதி செய்யப்படுகிறது. ஆய்வகத் திறப்பு விழாவைத் தொடர்ந்து, கால்நடை வளர்ப்பில் சிறந்து விளங்கிய ஐந்து செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்களுக்கும், பால் உற்பத்தியில் சாதனை படைத்த ஒன்பது சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.இளங்கோ, சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் வெ. கவிதா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும், மாவட்ட துணைப் பதிவாளர் (பால்வளம்) இரா.தே.பவணந்தி, ஆவின் பொது மேலாளர் டி.பிரவீனா மற்றும் முக்கிய அரசு அலுவலர்கள், பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் திரளாகப் பங்கேற்றனர். கரூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆய்வகம், மாவட்டத்தின் பால்வளத் துறையில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுவதோடு, நுகர்வோரின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















