உலகப்புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வரும் 17-ஆம் தேதி சனிக்கிழமையும், பாலமேடு ஜல்லிக்கட்டு விழா நாளை 16-ஆம் தேதியும் மிக விமரிசையாக நடைபெற உள்ளன. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை எவ்விதத் தொய்வுமின்றி, பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான இறுதி கட்டப் பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அலங்காநல்லூரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், ஜல்லிக்கட்டுப் போட்டியில் மிக முக்கியமான பகுதியான இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள், காளைகள் பரிசோதனை செய்யப்படும் இடங்கள் மற்றும் மாடுபிடி வீரர்களின் உடல் தகுதியை ஆய்வு செய்யும் மருத்துவ முகாம் பகுதிகளைப் பார்வையிட்டார். மேலும், பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளைக் காண அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கேலரிகள், போட்டியில் பங்கேற்று வெளியேறும் காளைகளைப் பத்திரமாகச் சேகரிக்கும் இடங்கள் (Bull Collection Yard) ஆகியவற்றின் உறுதித்தன்மை குறித்துப் பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், சமயநல்லூர் டி.எஸ்.பி. ஆனந்தராஜ் மற்றும் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் உடனிருந்தனர்.
பாலமேடு பகுதியில் நடைபெற்ற ஆய்வின்போது, வாடிவாசல் பகுதி, காளைகள் வெளியே வரும் வழி மற்றும் பார்வையாளர்கள் மாடம் ஆகியவற்றைப் பார்வையிட்ட அமைச்சர், வாடிவாசலில் காளைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு தரைத்தளத்தில் தேங்காய் நார்களைப் பரப்புவது குறித்து அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் சிவக்குமார், சசிகலா, மாவட்ட அவைத் தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியன், விழாக்குழுத் தலைவர் ரகுபதி மற்றும் பேரூராட்சித் தலைவர்கள் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், சுமதி பாண்டியராஜன், துணைத்தலைவர்கள் சுவாமிநாதன், ராமராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சித் துறை அலுவலர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
காவல்துறை சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவக் குழுக்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, காளைகளுக்கும் வீரர்களுக்கும் எவ்விதக் காயமும் இன்றி, உலகத்தரம் வாய்ந்த முறையில் போட்டிகளை நடத்தி முடிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
















