பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ வடிவமைத்த இ.ஓ.எஸ் என்-1 செயற்கைக் கோள் மற்றும் 15 சிறியரக வணிக செயற்கைக் கோள்களை ஏந்திச் சென்ற பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட், திட்டமிட்டபடி அதன் இலக்கை அடையவில்லை. இந்த திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளான இ.ஓ.எஸ் என்-ஒன்று செயற்கைக்கோளையும், ஸ்பெயின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சிறிய சோதனைக் கருவி மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வடிவமைத்த 15 சிறியரக செயற்கைக் கோள்களையும் தாங்கியபடி, பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் இன்று காலை 10.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
டி.ஆர்.டி.ஓ-வின் அன்வேஷா செயற்கைக்கோளையும், இதர 15 செயற்கைக் கோள்களையும் சூரிய நீள்வட்டப்பாதையில் செலுத்துவதற்கான முயற்சியில் பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் ஈடுபட்டது. என்றாலும், ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள்கள் பிரிந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
புவி கண்காணிப்பை மேற்கொண்டு வரும் கவுடில்யா, சிந்து-நேத்ரா செயற்கைக் கோள்களுடன் அன்வேஷா-வும் இணையும் என்று எதிர்ப்பார்க்கட்ட நிலையில், இந்த திட்டம் தோல்வியடைந்துள்ளது. திட்டமிட்டபடி, பிஎஸ்எல்வி-சி-62 ராக்கெட் இலக்கை அடையவில்லை என்று நாராயணன் கூறினார்.

















