ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாக்குவெட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், அறுவடைக்குத் தயாராக இருந்த சோளப் பயிர்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. ஏற்கனவே போதிய பருவமழை பெய்யாததால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு, எஞ்சிய பயிர்களையும் காட்டு விலங்குகள் அழித்து வருவது பேரிடியாக அமைந்துள்ளது. பாக்குவெட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில், நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கம்பு, சோளம், குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியப் பயிர்களே பிரதானச் சாகுபடியாக உள்ளன. இந்த ஆண்டு வறட்சியின் பிடியில் நெல் விவசாயம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்திற்காகச் சிறுதானியப் பயிர்களைப் பெரிதும் நம்பியிருந்தனர்.
கடந்த சில வாரங்களாகப் பாக்குவெட்டி சுற்றுவட்டாரக் காடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் காட்டுப்பன்றிகள், இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சோளக் கதிர்களைக் கடித்துச் சிதைத்து வருகின்றன. நிலத்தைப் பறித்து வேர்களைச் சேதப்படுத்துவதால் சோளப் பயிர்கள் மீண்டும் வளர முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சிறுதானியங்கள் அறுவடைக்கு முன்னரே அழிந்து வருகின்றன. போதிய மழையின்றி வறட்சியில் காய்ந்து கொண்டிருந்த பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், வனவிலங்குகளின் இந்தத் தாக்குதல் அவர்களை நிலைகுலையச் செய்துள்ளது.
இரவு நேரங்களில் விவசாயிகள் விளைநிலங்களில் காவலுக்கு இருந்தாலும், காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கையும் அதன் ஆக்ரோஷமும் அதிகமாக இருப்பதால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். இது குறித்துப் பகுதி விவசாயிகள் கூறுகையில், “மழை பொய்த்ததால் நெல் விவசாயம் கைவிட்டது; குறைந்தபட்ச வருமானத்திற்காகச் சிறுதானியம் பயிரிட்டோம். இப்போது காட்டுப்பன்றிகள் அதையும் மிச்சம் வைக்காமல் அழிக்கின்றன. பயிர்க் காப்பீடு மற்றும் அரசு இழப்பீடு வழங்கினால் மட்டுமே எங்களது வாழ்வாதாரத்தைத் தக்கவைக்க முடியும்” என வேதனையுடன் தெரிவித்தனர். எனவே, வனத்துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் உடனடியாகப் பாதிப்படைந்த இடங்களைப் பார்வையிட்டு, காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















