திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தின் முன்பாக, அக்கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் மீது மற்றொரு நிர்வாகி பட்டாக்கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பொன்மலைப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அர்ஜுன் (35). திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் இவர், நேற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது, கட்சி அலுவலகத்தின் நுழைவாயிலில் வைத்து காங்கிரஸ் மாநகர் மாவட்ட கோட்டத் தலைவரான தென்னூர் ராமசந்திராபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீராகவேந்திரா (36) என்பவர் தன்னை வழிமறித்துப் பயங்கர ஆயுதத்தால் தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோதலுக்குப் பின்னணியில் நீண்ட நாட்களாக நீடித்து வரும் பணப் பரிவர்த்தனை தொடர்பான தகராறு இருப்பதாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் கட்சி அலுவலகத்தில் தேர்தல் ஆய்வுக் கூட்டம் நடைபெற இருந்த நிலையில், சிறப்பு விருந்தினரை வரவேற்பதற்காக அர்ஜுன் வாசலில் காத்திருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த ஸ்ரீராகவேந்திரா, திடீரென தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து அர்ஜுனின் தலையில் பலமாக வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த அர்ஜுன் நிலைகுலைந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயற்சித்துள்ளனர். தாக்குதல் நடத்தியதோடு மட்டுமல்லாமல், அர்ஜுன் மற்றும் அவரது தாய், சகோதரியைத் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஸ்ரீராகவேந்திரா அங்கிருந்து தப்பியோடியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி அலுவலகம் எனக்கூட பாராமல் பட்டப்பகலில் நிர்வாகி ஒருவரே சக நிர்வாகியை ஆயுதத்தால் தாக்கிய நிகழ்வு காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அர்ஜுன் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார். மாநகர காவல் ஆணையர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, தப்பியோடிய காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீராகவேந்திராவை போலீசார் தேடி வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளுங்கட்சியின் கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சியான காங்கிரஸில் அரங்கேறியுள்ள இந்த உட்கட்சி மோதல் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















