அமெரிக்காவுக்கு போதை பொருட்களை கடத்தி, உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, வெனிசுலா மீது அமெரிக்க ராணுவத்தினர் நேற்று முதல் தாக்குதலை தொடங்கினர். அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும், அவருடைய மனைவியையும் கைதுசெய்து, தங்கள் கட்டுப்பாட்டில் அமெரிக்கா வைத்துள்ளது. தற்போது வெனிசுலா முழுமையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது.
இந்தநிலையில் வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசுலாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். தேவைப்பட்டால் கராகஸ் நகரில் உள்ள இந்திய தூதரகத்தை இந்தியர்கள், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் அதில் தெரிவித்துள்ளது.
















