தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்புடன், 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது.
அதன்பிறகு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த திமுக, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கியது. ஆனால், கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டும் ஒருகிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என, தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. இந்த சூழலில், பொங்கல் பரிசு தொகுப்புடன், 3 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 குடும்ப அட்டைதார்களும், இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் குடும்பத்தினரும் பயன்பெறுவார்கள். இதற்காக 6 ஆயிரத்து 936 கோடி ரூபாய் அரசு ஒதுக்கி உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக, ரொக்கப்பரிசும், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி சேலைகள், அனைத்து ரேசன் கடைகள் வாயிலாக வழங்கிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

















