கோவை மாவட்டத்தில் பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் வகையில் சுகாதாரமற்ற முறையில் சமையல் எண்ணெய் தயாரிப்பவர்கள் மற்றும் தடையை மீறி சில்லறையாக எண்ணெய் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா எச்சரிக்கை விடுத்துள்ளார். சமையல் எண்ணெய்களில் கலப்படத்தைத் தவிர்க்கும் பொருட்டு, தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு (FSSAI) சில ஆண்டுகளுக்கு முன்பே பேக்கிங் செய்யப்படாத சில்லறை எண்ணெய் விற்பனைக்குத் தடை விதித்துள்ளது. இருப்பினும், கோவையின் சில பகுதிகளில் தற்போதும் பாத்திரங்கள் மற்றும் பாட்டில்களில் எண்ணெய் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பேரூர் பச்சாபாளையம் பகுதிகளில் உள்ள எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போதிய சுகாதாரமின்றிச் செயல்பட்ட இரண்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எண்ணெய் தயாரிப்பு கூடங்கள் திறந்தவெளியில் இருக்கக் கூடாது என்றும், கையாளுதல் முதல் விநியோகம் வரை அனைத்து நிலைகளிலும் தூய்மையைப் பேண வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விற்பனை மற்றும் தயாரிப்பு மையங்களிலும் FSSAI உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழைப் பொதுமக்கள் பார்க்கும் வகையில் தெளிவாக ஒட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், “பேக்கிங் செய்யப்படாத லூஸ் எண்ணெய்களில் பாமாயில் போன்ற மலிவான எண்ணெய்களைக் கலந்தால் பொதுமக்களால் அதைக் கண்டறிய இயலாது. இதனால் நுகர்வோர் ஏமாற்றப்படுவதுடன் உடல்நலக் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. சில்லறை விற்பனையில் சற்று கூடுதலாக எண்ணெய் கிடைக்கிறது என்ற காரணத்திற்காகப் பொதுமக்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பணையம் வைக்கக் கூடாது. எப்போதும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் முத்திரையிடப்பட்ட (Packed) எண்ணெய் பாக்கெட்டுகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும். மீறிச் சில்லறையாக விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது சட்டப்படி கடுமையான அபராதம் மற்றும் கடைகளுக்குச் சீல் வைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” எனத் தெரிவித்தார்.
எண்ணெய் வியாபாரிகளுக்குத் தேவையான முறையான வழிகாட்டுதல்கள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தவும் துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. கலப்படம் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் எண்கள் மூலம் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
















