மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு பகுதியில், முறையான பாசன நீர் விநியோகம் இல்லாத காரணத்தால் பல லட்சம் ரூபாய் செலவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. நீர்வளத் துறையின் அலட்சியப் போக்கால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக இப்பகுதி மக்கள் பெரும் கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளனர்.
கீழையூர் பிரதான கால்வாயிலிருந்து பிரியும் 8 முதல் 12 வரையிலான கிளைக் கால்வாய்கள் மூலம் கீழவளவு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு இப்பகுதி விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். பயிரிடப்பட்டு நூறு நாட்களைக் கடந்துள்ள நிலையில், தற்போது நெற்பயிர்கள் கதிர் வரும் பருவத்தை (பரிச்சல்) எட்டியுள்ளன. இந்த முக்கியமான தருணத்தில் பயிர்களுக்குத் தடையின்றித் தண்ணீர் கிடைக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், கடந்த 7 நாட்களாக இப்பகுதிக்கான தண்ணீர் விநியோகத்தை நீர்வளத் துறையினர் திடீரென நிறுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் சிறிது நேரம் மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டு, மீண்டும் உடனடியாக நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்துக் கவலையுடன் பேசிய விவசாயி சிவா, “கூட்டுறவுச் சங்கத்தில் கடன் வாங்கி ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளோம். தற்போது தண்ணீர் இல்லாததால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. கதிர் வரும் நேரத்தில் தண்ணீர் நிறுத்துவது பயிர்களைப் பதறாக்கிவிடும். இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகளைப் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவர்கள் முறையான பதில் அளிக்க மறுக்கின்றனர். இதே நிலை நீடித்தால் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட முடியாது என்பதோடு, எங்கள் குடும்பங்களே நடுத்தெருவிற்கு வரும் சூழல் உருவாகும்” என வேதனை தெரிவித்தார்.
பாசன நீர் மேலாண்மையில் நிலவும் குளறுபடிகளே இதுபோன்ற சிக்கல்களுக்குக் காரணம் எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மழையை நம்பி ஒருபுறம் விவசாயிகள் போராடி வரும் நிலையில், கால்வாயில் தண்ணீர் இருந்தும் அதிகாரிகளின் மெத்தனத்தால் பயிர்கள் கருகி வருவது கண்டிக்கத்தக்கது. எனவே, மாவட்ட நிர்வாகமும் நீர்வளத் துறையும் உடனடியாக தலையிட்டு, கீழவளவு பகுதி கிளைக் கால்வாய்களில் தடையின்றித் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட வயல்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.













