மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்று தங்கள் குறைகளை முறையிட்டனர். அப்போது விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறுகையில் 2024 வடகிழக்கு பருவமழை, மற்றும் 2025 பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிகளுக்கு தமிழக அரசு 71 கோடியே 30 லட்சத்து 90 ஆயிரத்து 748 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை பெறுவதற்காக 12 மாத காலம் விவசாயிகள் போராட்டம் நடத்தியதாலும் மாவட்ட ஆட்சியர் ஒத்துழைப்பாலும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் ஒருவரும் தங்களுக்கு துணை நிற்கவில்லை என்று கூறிய விவசாயிகள், கடந்த 26 ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்ற நிவாரணம் தொகை 71 கோடி அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கு விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் விவசாயிகளையும் ஏன் அழைக்கவில்லை என்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சியை சேர்ந்த திமுகவினரை மட்டும் அழைத்து நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்தீர்களா என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு நன்றி அறிவிப்பு கூட்டமே நடத்தவில்லை என்று பதில் சொன்ன வேளாண்துறை இணை இயக்குனரிடம் செல்போனில் உள்ள போட்டோவை காண்பித்து இதற்கு என்ன பெயர் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இனிமேல் எந்த கூட்டம் நடத்தினாலும் ஒவ்வொரு விவசாய சங்கத்திலிருந்தும் ஒருவர் அழைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய விவசாயிகள் கணக்கெடுப்பை கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள் முறையாக கணக்கீடு செய்யாததால் இன்று பாரபட்சமாக நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். ராமலிங்கம் என்ற விவசாயி பாரபட்சமாக தாலுகா வாரியாக நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் வயிறு எரிகிறது நன்றாக இருக்க மாட்டீர்கள் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். நிவாரணத் தொகை தாலுகா வாரியாக வட்டாட்சியரிடம் பிரித்து அளிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு மூன்று நாட்களில் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தனர்.















