தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்பன் கோவில் வளாகத்தில், ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் மார்கழி உற்சவ விழா கடந்த இரண்டு நாட்களாகக் கலைகட்டியது. ஆன்மீகச் சிறப்புகள் மிக்க இந்தத் திருக்கோயில் வளாகத்தில் ஐயப்ப சுவாமிக்குத் தனிச் சன்னதி அமைந்திருப்பதோடு, தமிழகத்தின் வியக்கத்தக்க கட்டுமானங்களில் ஒன்றான 49 அடி உயர மாகாளியம்மன் சிலையும், ஐயனார், பத்ரகாளி அம்மன் சக்தி பீடங்களும், குபேர பீடத்தில் அமர்ந்துள்ள குருபகவானும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்கக் கோவிலில் நடைபெற்ற இந்த ஆண்டு உற்சவ விழாவைக் காண ஆண்டிபட்டி, சக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டனர்.
இரு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவின் முதல் நாளில், ஐயப்ப சுவாமிக்கு 1008 விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. மதிய வேளையில் பக்திப் பெருக்குடன் அம்மன் கரகம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பெண்களின் கும்மியாட்டத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக இந்த ஊர்வலம் சென்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக முதல் நாள் இரவு, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஐயப்ப சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி சக்கம்பட்டி, ஆண்டிபட்டி மற்றும் கொண்டமநாயக்கன்பட்டி பகுதிகளின் முக்கிய வீதிகள் வழியாகத் திருவீதி உலா வந்தனர். வீதிதோறும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களுக்கு முன்பாக வாசலில் கோலமிட்டு, சுவாமிக்குத் தீபாராதனை காட்டி உற்சாகத்துடன் தரிசனம் செய்தனர்.
இரண்டாம் நாள் அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் வழிபாடுகள் தொடங்கின. நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிய பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து தங்களது பக்தியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து குரு பகவான் குபேர ஹோமம் மிக விமரிசையாக நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக, பிரம்மாண்டமான 49 அடி உயர மாகாளியம்மனுக்கு 108 குடங்கள் பாலாபிஷேகம் நடைபெற்றது. பால் நதியில் அம்மன் குளிப்பது போன்ற இக்காட்சியைக் கண்ட பக்தர்கள் ‘ஓம் சக்தி’ முழக்கமிட்டு வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் பூச்சொரிதல் விழா நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த மார்கழி உற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிறுவனர் முத்து வன்னியன் தலைமையில் பக்தர்கள் குழுவினர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

















