கரூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்துக்கு காரணமான குற்றவாளியையும், பெண்கள் பாதுகாப்பில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக கூறப்படும் திமுக அரசையும் மக்கள் கடுமையாகத் தண்டிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூரில், மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளதாக கூறியுள்ளார்.
அரசியல் தலைவர் என்ற அடையாளத்தைத் தாண்டி, ஒரு தந்தையாக இந்தச் சம்பவத்தை ஜீரணிக்க முடியவில்லை என்றும், பாதிக்கப்பட்ட குழந்தை விரைவில் மனநலம் மற்றும் உடல் நலத்தில் முழுமையாக மீண்டு வர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், டாஸ்மாக் மையமாக கொண்ட அரசின் கொள்கைகளால் தமிழகத்தில் மதுபோதைக்கு அடிமையான சூழல் உருவாகி, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதாக வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவிக் கொண்டிருக்கும் சூழலில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” போன்ற விளம்பரங்களை திமுக வெளியிடுவது வேடிக்கையாக உள்ளது என்றும் நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.
மழலை மாறாத குழந்தையைச் சீரழித்த குற்றவாளியும், கடந்த நான்கரை ஆண்டுகளாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுக அரசும் எந்தத் தயவும் இன்றி தண்டிக்கப்பட வேண்டியவர்கள் எனக் கூறிய அவர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நீதியின் பெயரில் திமுக கடுமையான தீர்ப்பை சந்திக்கும் என தெரிவித்துள்ளார்.

















