கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் (Bird Flu) பாதிப்பு ஏற்பட்டிருப்பதை மத்திய ஆய்வகம் உறுதி செய்துள்ளது. மேலும், அப்பகுதிகளில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் நோய் தொற்று பரவாமல் தடுக்க, தேனி மாவட்ட எல்லையோரச் சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.
தேனி மாவட்டத்தின் முக்கிய நுழைவு வாயில்களான குமுளி, கம்பம்மெட்டு மற்றும் போடி முந்தல் ஆகிய மூன்று சோதனைச் சாவடிகளிலும் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். கால்நடை பராமரிப்புத் துறையின் நோய் புலனாய்வுப் பிரிவு மற்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, கேரளாவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தீவிரத் தணிக்கைக்கு உட்படுத்தி வருகின்றனர். இந்தப் பணிக்காக அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும், பின்னர் மாலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 8:00 மணி வரையும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக, கேரளாவிலிருந்து வரும் லாரிகள், டெம்போக்கள் மற்றும் இதர கனரக வாகனங்களின் சக்கரங்களில் ‘குளோரின் டை ஆக்சைடு’ கலந்த சக்திவாய்ந்த கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும், தொற்று பரவலைத் தடுக்கச் சோதனைச் சாவடிகளைச் சுற்றியுள்ள சாலைப் பகுதிகளில் பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டு வருகிறது. சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், வாகனங்களில் வரும் நபர்களுக்குக் காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் பரிசோதித்து வருகின்றனர்.
தற்போது நிலவி வரும் சூழல் குறித்து வனத்துறை மற்றும் கால்நடைத் துறை அதிகாரிகள் கூறுகையில், “கேரளாவிலிருந்து கோழி, வாத்து உள்ளிட்ட பறவை இனங்கள் மற்றும் பன்றிகளைத் தமிழகத்திற்குள் கொண்டு வரத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்திலிருந்து கேரளாவுக்குக் கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்குத் தடை ஏதுமில்லை. எல்லையோரக் கிராமங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர். இந்தத் தீவிரக் கண்காணிப்புப் பணியால் தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.















