திண்டுக்கல் மாவட்டத்தில் 96 கிராமங்களின் தாய்க்கோவிலாகத் திகழும் புகழ்பெற்ற, 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் திருவிழா மற்றெங்கும் இல்லாத வகையில் மிக வித்யாசமான மற்றும் அர்த்தமுள்ள முறையில் கொண்டாடப்பட்டது. உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25-ஆம் தேதியைக் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவாகக் கொண்டாடி வரும் நிலையில், அதன் தொடக்கமாக 24-ஆம் தேதி நள்ளிரவு மேட்டுப்பட்டி ஆலயத்தில் சிறப்புப் பாடற்திருப்பலி நடைபெற்றது. அருள்தந்தை அருமைசாமி தலைமையில் நடைபெற்ற இந்தத் திருப்பலியில், பங்குத்தந்தை செல்வராஜ், உதவிப் பங்குத்தந்தை ஜஸ்டின் பால்சன், அருள்தந்தையர்கள் பீட்டர் ராஜ், லாரன்ஸ் மற்றும் திருத்தொண்டர் அருள் அஜித்குமார் ஆகியோர் இணைந்து இறைமக்களுக்கு நற்செய்தி வழங்கித் திருப்பலியை நிறைவேற்றினர்.
இந்த ஆண்டு நிகழ்வின் தனிச்சிறப்பாக, நள்ளிரவு சரியாக 12 மணி அளவில் ஆலயத்தின் நுழைவாயில் முன்புறமிருந்து மின்னொளியில் ஜொலிக்கும் ‘வால் நட்சத்திரம்’ தோன்றி, ஆலயத்தின் பீடத்தை நோக்கி நகர்ந்து சென்றது. அதனைத் தொடர்ந்து, மனித வாழ்வின் ஆணிவேர் அன்புதான் என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக, ஒரு பிரம்மாண்டமான வேரின் நடுவிலிருந்து குழந்தை இயேசு பிறப்பது போன்ற தத்ரூபமான காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அன்பின் அடையாளமான பூவை வேர் தாங்கி வர, அதிலிருந்து பாலன் இயேசு வெளிப்பட்ட அந்தத் தருணத்தில், ஆலயத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒருமித்த குரலில் ‘அல்லேலூயா’ முழக்கமிட்டு, கரவொலி எழுப்பி மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்த வித்யாசமான குடில் வடிவமைப்பு, இறைவனின் பிறப்பு இயற்கையோடும், மனிதத்தின் வேரோடும் இணைந்தது என்பதைப் பறைசாற்றுவதாக அமைந்தது.
ஆலய வளாகம் முழுவதும் கண்ணைக் கவரும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், ஆலய அலங்காரக் குழுவினரால் உருவாக்கப்பட்ட சிறப்புக் குடில் அனைவரையும் கவர்ந்தது. இந்தத் திருப்பலியில் அருட் சகோதரிகள், திருத்தொண்டர்கள் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்று ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். விழா நிறைவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பான கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது. 350 ஆண்டுகால வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க இந்த ஆலயத்தில், பழமை மாறாமல் அதே சமயம் புதுமையான சிந்தனையுடன் நடத்தப்பட்ட இந்தக் கிறிஸ்துமஸ் விழா, திண்டுக்கல் மாவட்டத்தின் மதநல்லிணக்கத்திற்கும் பக்திக்கும் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்குத்தந்தை தலைமையில் பங்கு மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

















