திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கூடம் நகர் கிராமத்தில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள், சாலை வசதியின்றி அடிப்படைத் தேவைகளுக்காகத் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கூடம் நகர் மக்கள் தங்களது அன்றாட அத்தியாவசியத் தேவைகள், அவசர மருத்துவச் சிகிச்சை மற்றும் மலைப்பயிர்களான காபி, மிளகு உள்ளிட்ட விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கு பண்ணைக்காடு சாலையையே முழுமையாகச் சார்ந்துள்ளனர். மொத்தம் 9 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்தச் சாலையில், 4 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே வனத்துறை பொறியியல் பிரிவு மூலம் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 கிலோமீட்டர் தூரம் குண்டும் குழியுமாக, வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு முற்றிலும் சேதமடைந்து காணப்படுவதால், நாள்தோறும் முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கரடுமுரடான இந்தப் பாதையில் பயணிப்பதால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடுவதோடு, அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் கூட வர முடியாத அவல நிலை நீடிக்கிறது.
கிராம மக்களின் நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு, இந்தச் சாலையைச் சீரமைக்க தமிழக அரசு சார்பில் ரூ.4 கோடியே 89 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்பு முதற்கட்டமாகச் சேதமடைந்த சாலையை இயந்திரங்களைக் கொண்டு சமன்படுத்தும் பணிகள் உற்சாகமாகத் தொடங்கின. ஆனால், தற்போது இப்பணி வனத்துறையின் திடீர் எதிர்ப்பால் பாதியிலேயே முடங்கிப் போயுள்ளது. வனத்துறை விதிகளின்படி குறிப்பிட்ட பகுதிக்கு மேல் சாலை அமைக்க அனுமதி இல்லை எனக் கூறி பணிகள் நிறுத்தப்பட்டதால், ஒதுக்கப்பட்ட நிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதியில் நிறுத்தப்பட்ட பணியால் சாலை முன்பை விட மோசமாக மாறியுள்ளதாகக் கூறும் கிராமத்தினர், அதிகாரிகளின் இந்த இழுபறியால் தாங்கள் தீராத துயரத்தைச் சந்திப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து பேசி, முடங்கிக் கிடக்கும் சாலைப் பணியை உடனடியாகத் தொடங்கி முடிக்க வேண்டும் என்பதே மலைக்கிராம மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

















