பழனியில் வீடு புகுந்து பெண்ணைக் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில், ‘மின்னல்’ வாய்க்கால் சாமி என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி: பழனி அடிவாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் வசிப்பவர் ஜெயப்பிரதா. இவரது வீட்டிற்குள் கடந்த சில காலத்திற்கு முன்பு அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், ஜெயப்பிரதாவை கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ. 5,500 ரொக்கப்பணத்தைப் பறித்துச் சென்றார். இச்சம்பவம் குறித்துப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பழனி அடிவாரம் போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட பழனி குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்த வாய்க்கால் சாமி (எ) மின்னல் வாய்க்கால் சாமி (45) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீதிமன்ற விசாரணை: இந்த வழக்கு பழனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதற்காக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப. அவர்கள் வழிகாட்டுதல்களை வழங்கினார். புலன் விசாரணை அதிகாரிகள் மற்றும் சட்டக் குழுவினரின் சீரிய முயற்சியால்: பழனி நகர வட்ட காவல் ஆய்வாளர் திரு. மணிமாறன், தற்போதைய அடிவாரம் காவல் ஆய்வாளர் திரு. ராஜா, நீதிமன்ற முதல் நிலை காவலர் திரு. ரெங்கநாதன், அரசு வழக்கறிஞர் திரு. பார்த்திபன், ஆகியோர் நீதிமன்றத்தில் வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பித்தனர்.
நீதிமன்றத் தீர்ப்பு: அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவுற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றவாளி மின்னல் வாய்க்கால் சாமிக்கு: 05 ஆண்டுகள் சிறை தண்டனை. ரூ. 3,000/- அபராதம். விதித்து உத்தரவிட்டார். பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய நபருக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தந்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
















