தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருநெல்வேலிக்கு வருகை தரும் நிலையில், மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் ரூ.62 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்.
இரு நாள் சுற்றுப்பயணமாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்து, அங்கிருந்து கார் மூலம் திருநெல்வேலி நகருக்கு செல்கிறார். அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
திருநெல்வேலி மாநகர வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் தங்குகிறார். மதிய உணவுக்குப் பிறகு, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று அங்கு நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்கிறார்.
பின்னர், திருநெல்வேலி ரெட்டியார்பட்டி மலை நான்கு வழிச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். அகழாய்வில் கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், தமிழர்களின் நாகரிகச் சிறப்பை எடுத்துரைக்கும் முக்கிய அடையாளமாக விளங்குகிறது. திறப்பு விழாவுக்குப் பிறகு, அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு கட்டிடத்தையும் முதல்வர் பார்வையிட உள்ளார். இதற்காக பிரத்யேக மின்சார வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரவு அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கும் முதல்வர், நாளை காலை வண்ணார்பேட்டையில் இருந்து புறப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் ரூ.639 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டிடம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மேலும், 45 ஆயிரம் பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதுடன், திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளுக்கான 50 புதிய பேருந்து சேவைகளையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார். அரசு விழா முடிந்ததும், தூத்துக்குடி விமான நிலையம் வழியாக சென்னை திரும்புகிறார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அரசு விழாவுக்காக 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் வருகையை முன்னிட்டு, வண்ணார்பேட்டை முதல் டக்கரம்மாள்புரம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. இருபுறமும் கட்சிக்கொடிகள், வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளதால், நெல்லை மாநகரம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் காட்சி அளிக்கிறது.

















