வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத் தீவுப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் ஆகிய பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி தீவுப்பகுதியில் ஒட்டுமொத்தமாக 8.9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இடவாரியான மழையளவு (மி.மீ-இல்): தங்கச்சிமடம்: 33.00 மி.மீ பாம்பன்: 29.20 மி.மீ ராமேஸ்வரம்: 27.00 மி.மீ
தொடர் மழையின் காரணமாக ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலை, மார்க்கெட் தெரு மற்றும் லெட்சுமண தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. முறையான வடிகால் வசதி இல்லாத இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மழையுடன் சேர்த்து பலத்த குளிர்காற்று வீசி வருவதால், புனித நீராட வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் கடும் குளிரால் வாடி வருகின்றனர். பகல் முழுவதும் சாரல் மழையுடன் கூடிய பனிமூட்டமான வானிலை நிலவுகிறது. மேலும், காற்று மற்றும் மழையினால் அதிகாலை முதல் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புப்படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. இதனால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள் போதிய முன்னேற்பாடுகளுடன் வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

















