விழுப்புரத்தில் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து ஆண்டு காலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வரும் சமூக சேவகரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் நகரப் பகுதியைச் சேர்ந்தவர் தன்சிங். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட இவர், கடந்த 10 ஆண்டுகாலமாக விழுப்புரம் நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்குப் போர்வைகள், வேட்டி, சேலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்.
இது குறித்து தன்சிங் கூறுகையில், “எனது ஒருநாள் வருமானமான 1000 ரூபாயில், தினமும் 300 முதல் 400 ரூபாய் வரை இந்தச் சேவைக்காகவே ஒதுக்கி விடுகிறேன். இவ்வாறு ஏழை எளியவர்களுக்கு உதவும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை கிடையாது. உதவி பெறுபவர்களின் முகத்தில் தெரியும் அந்தச் சிரிப்புதான் எனக்கும், என் குடும்பத்திற்கும் உண்மையான மகிழ்ச்சியைத் தருகிறது,” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், இவரது இந்தச் சேவையைக் கண்டு ஈர்க்கப்பட்ட பலர், தற்போது ஏழைகளுக்கு உதவ முன்வந்துள்ளனர். தன்னைப் போலவே இன்னும் ஏராளமானோர் இது போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார். தன்சிங்கின் இந்த அர்ப்பணிப்பு மிகுந்த செயலை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

















