ஈரோடு:
ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில், கட்சித் தலைவர் நடிகர் விஜய் ஆற்றிய உரையில் இடம்பெற்ற ஒரு “பாம்பு கதை” மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றது.
கூட்டத்தில் பேசிய விஜய், ஈரோடு மண்ணின் பாரம்பரியமும், விவசாயச் சிறப்பும் குறித்து பேசினார். “பொதுவாக நல்ல காரியத்தை மஞ்சளோடு தொடங்குவோம். வீட்டில் அம்மா, அக்கா, தங்கைகள் நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்று மஞ்சள் கட்டி வேண்டுவார்கள். அந்த மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு,” என அவர் குறிப்பிட்டார். விவசாயத்திற்கு பெயர் பெற்ற மண் இது என்றும், இம்மக்கள் தன்னை நம்பி ஆதரவு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், காலிங்கராயன் அணை குறித்து பேசிய விஜய், “அந்த காலத்து ஹீரோ காலிங்கராயன். அவர் இந்த அணையை எப்படி கட்டினார் தெரியுமா? ஒரு பாம்பு சென்ற பாதையை அடிப்படையாக வைத்து, அந்த திசையில் நதியின் ஓட்டத்தை நிர்ணயித்து அணையை கட்டியதாக ஒரு கதை உண்டு. அப்படிப்பட்ட தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டவர்கள் வாழ்ந்த மண் இது,” எனக் கூறினார். இந்தப் பகுதி கூட்டத்தில் இருந்தவர்களிடையே கவனம் பெற்றது.
அத்திக்கடவு–அவிநாசி திட்டம் விரிவுபடுத்தப்படாததால் இப்பகுதி வறட்சியை சந்தித்து வருவதாகவும், அந்த திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் கண்காட்சிகளில் கவனம் செலுத்துவதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.
அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் தமிழ்நாட்டின் பொது சொத்து என்றும், அவர்களின் பெயரை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்றும் விஜய் கூறினார். “எங்களுக்கு பயமில்லை என்று சொல்லிக்கொண்டே பயந்து கத்தும் சிறுவனைப் போல சிலர் நடந்து கொள்கிறார்கள்,” என மறைமுகமாக விமர்சனம் செய்த அவர், “பெயர்களை மட்டும் சொல்லி அரசியல் செய்யாமல், மக்கள் பிரச்சனைகளில் நேரடியாக களத்தில் நிற்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.
இறுதியாக, “எங்களுக்கு செய்ய வேண்டிய வேலை அதிகம். மக்கள் நலனுக்காக ஒரே பாதையில் அரசியல் செய்து கொண்டே போவோம்,” எனக் கூறி தனது உரையை முடித்தார்.

















