நீதிமன்ற வழக்கை ஆன்லைன் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்து,பழையை நடைமுறையையே பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழமை நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்குகளை ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், ஆன்லைனில் பதிவு செய்யும் முறைக்கு போதிய கட்டமைப்பு செய்துவிட்டு இதனை நடைமுறைபடுத்த வேண்டும், கட்டமைப்பு ஏற்படுத்தும் வரை பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கத்தை சார்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் வழக்கறிஞர்கள் சாலையில் அமர்ந்திருந்த போது பின்னால் வந்த கார் ஓட்டுநர் ஒதுங்கி செல்ல முயன்ற போது வழக்கறிஞர்களுக்கும் கார் ஓட்டுநர்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் வழக்கறிஞர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு, வருகின்ற 19ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து கலைந்து சென்றனர். இதனால் திருச்சி – சென்னை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
















