சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, கடும் சிரமங்களுக்கு இடையே தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயிரிடப்பட்ட நெற்பயிர்களைக் கோயில் மாடுகள் புகுந்து மேய்ந்து நாசமாக்கிய சம்பவம், விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐநூத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆண்டிச்சாமி, தனது மூன்று ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தார். நடப்பு பருவத்தில் போதிய மழை பெய்யாத நிலையிலும், பயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் லாரிகள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பாய்ச்சி, கண்ணும் கருத்துமாகப் பயிரை வளர்த்து வந்தார்.
இப்பகுதியில் கோயில் மாடுகள் கூட்டமாகத் திரிந்து விளைநிலங்களைச் சேதப்படுத்துவது வழக்கமாக உள்ளதால், தனது பயிரைப் பாதுகாக்க ஆண்டிச்சாமி வயலிலேயே தற்காலிகக் குடில் அமைத்து இரவு பகலாகக் காவல் காத்து வந்தார். இருப்பினும், நள்ளிரவில் 50-க்கும் மேற்பட்ட கோயில் மாடுகள் திடீரெனப் புகுந்து, வயலைச் சுற்றியிருந்த வேலிகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தன. கண் இமைக்கும் நேரத்தில் அந்த மாடுகள் பெரும்பாலான நெற்பயிர்களைத் தின்று மிதித்து வீணாக்கிவிட்டன. இதனால் பல மாத உழைப்பும், முதலீடும் மண்ணாகிப் போனதைக் கண்டு ஆண்டிச்சாமி நிலைகுலைந்து போயுள்ளார்.
தன்னுடைய வேதனையைப் பகிர்ந்து கொண்ட ஆண்டிச்சாமி, “விவசாயத்திற்காக வெளிநபர்களிடம் வட்டிக்குக் கடன் வாங்கியும், என் மனைவியின் நகைகளை அடகு வைத்தும்தான் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயிரை வளர்த்தேன். தற்போது அனைத்தும் வீணாகிவிட்டது. இந்தப் பகுதியில் மட்டும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில் மாடுகள் கட்டுப்பாடின்றிச் சுற்றித் திரிகின்றன. இதனால் எங்களைப் போன்ற சிறு விவசாயிகள் விவசாயம் செய்யவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் இது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
கோயில் மாடுகளால் ஏற்படும் இத்தகைய சேதங்கள் சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்கதையாகி வருவதால், விவசாயத் தொழில் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கோயில் மாடுகளை முறையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















