சென்னை:
தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டு வந்த இண்டிகோ விமான சேவைகள் சமீப நாட்களாக படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் இந்த மாற்றம் பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கும் இண்டிகோ, மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அண்மையில் கொண்டு வந்த புதிய விதிமுறைகளைக் காரணமாகக் காட்டி, கடந்த 1ஆம் தேதி முதல் பல விமான சேவைகளை ரத்து செய்தது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் விமானங்கள் கிடைக்காமல் விமான நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பயணிகள் சந்தித்த சிரமங்களைத் தொடர்ந்து, மத்திய அரசு தலையிட்டு விமான நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் பின்னர் சில விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பல விமான நிலையங்களில் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது.
நிலைமை விரைவில் சீராகும் என இண்டிகோ நிர்வாகம் தெரிவித்தாலும், நடைமுறையில் விமான சேவைகள் வழக்க நிலைக்கு திரும்பவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுவரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் தினசரி விமான சேவைகளை இண்டிகோ இயக்கி வந்தது. ஆனால், எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் இன்றி தற்போது விமான எண்ணிக்கையை குறைத்துள்ளது.
இதனால், தமிழகத்தில் இருந்து இண்டிகோ தனது சேவைகளை முழுமையாக வாபஸ் பெறும் எண்ணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக விமானப் போக்குவரத்து துறையினர் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறுகையில், “மாநிலங்களுக்கு இடையேயான விமானப் போக்குவரத்தில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தின் பல நகரங்களில் இருந்து சென்னைக்கு தினசரி விமான சேவை வழங்கப்பட்டு வந்தது. இந்த சேவைகளை பெரும்பாலும் இண்டிகோ மட்டுமே இயக்கி வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள திடீர் குறைப்பு மர்மமாக உள்ளது” என்றனர்.
மேலும், இரண்டாம் நிலை நகரங்களில் விமானப் பயணம் அதிகரித்து வரும் சூழலில், மாற்று விமான நிறுவனங்கள் இந்த மார்க்கங்களில் சேவை தொடங்க முன்வராததும் கேள்விக்குறியாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த திடீர் சேவை குறைப்பு தொடர்ந்தால், விமான டிக்கெட் கட்டணங்கள் உயர வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கு மாற்று தீர்வுகளை தமிழக அரசு தேட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளதாகவும் விமானத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

















