பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தொடர்பான ஹிஜாப் விவகாரம், அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவர்களுக்கு பணி நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில், இஸ்லாமிய பெண் ஒருவரின் ஹிஜாப்பை அவர் இழுத்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, கடும் எதிர்ப்புகளை கிளப்பியது.
இந்த சம்பவத்தை கண்டித்து ஆர்.ஜே.டி., காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. நடிகை ஜைரா வாசிம் உள்ளிட்ட பிரபலங்களும் நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகள், இது பெண்களுக்கும் மத நம்பிக்கைக்கும் எதிரான செயலாக இருப்பதாக குற்றம்சாட்டின.
இந்நிலையில், நிதிஷ் குமாருக்கு ஆதரவாக உத்தரப்பிரதேச அரசின் மீன்வளத் துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத் வெளியிட்ட கருத்துகள் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளன. அவர் பேசுகையில், “ஹிஜாபை இழுக்கவில்லை. நியமனக் கடிதம் சரியான நபருக்குத்தான் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காகவே அவர் பார்த்தார். இதற்காக மக்கள் தேவையற்ற அமளி செய்யக்கூடாது” என தெரிவித்தார்.
மேலும், “ஹிஜாபைத் தொட்டதற்கே இவ்வளவு எதிர்ப்பு கிளம்புகிறது. வேறு எதையாவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்” என்ற அவரது கருத்து, பெரும் கண்டனங்களை சந்தித்துள்ளது. அவரது இந்த பேச்சு பெண்களுக்கு எதிரானதும், அருவருக்கத்தக்கதும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத், “ஒரு மாநில அமைச்சர் இத்தகைய வெட்கக்கேடான வார்த்தைகளை சிரித்துக்கொண்டே கூறுவது, அவரது பெண் வெறுப்பு மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது” என விமர்சித்துள்ளார்.
இதனிடையே, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சுமையா ராணா, லக்னோவில் நிதிஷ் குமார் மற்றும் சஞ்சய் நிஷாத் ஆகியோருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். இருவர்மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து எழுந்த விமர்சனங்களை அடுத்து, சஞ்சய் நிஷாத் தனது கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் அளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான இரண்டாவது அரசில் மீன்வளத் துறை அமைச்சராக உள்ள சஞ்சய் நிஷாத், 2021 முதல் சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார். நிஷாத் சமூகத்தைச் சேர்ந்த அவர், 2016ஆம் ஆண்டு ‘நிஷாத்’ கட்சியை நிறுவியது குறிப்பிடத்தக்கது.















