காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைபாக்கம் சிப்காட் தொழில்நுட்ப பூங்காவில், “பாரத் க்ளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம்” ஆயிரத்து மூன்று கோடி ரூபாய் முதலீட்டில், 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி பொருட்கள் ஆலையை நிறுவியிருக்கிறது.
இந்த ஆலையில், உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணையினை அவர் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், கடந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதில், 80 சதவீத திட்டங்களை பல்வேறு நிலைகளில் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.
எலெக்ட்ரானிக்ஸ் துறையில் 14 புள்ளி 65 பில்லியன் டாலர் பொருட்கள் ஏற்றுமதி செய்து, இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் விளங்குவதாகவும் அவர் கூறினார். தொலைநோக்கு சிந்தனையோடு கொள்கைகளை உருவாக்கி, தொழில்களுக்கு உகந்த சூழலை உருவாக்கியிருப்பதால், முதலீட்டாளர்கள் தமிழகம் நோக்கி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
















