புதுச்சேரி: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரைப் பயணம் மீண்டும் தொடங்கும் முயற்சிகள் வேகமெடுத்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் சாலை வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதி கோரிக்கை குறித்து முக்கிய ஆலோசனைகள் நடந்துள்ளன.
கடந்த மாதம் நடைபெற்ற தவெகின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், விஜயின் பரப்புரை பயணத்தை மீண்டும் தொடங்க முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, சேலத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி நகர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், கார்த்திகை தீப விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக காவல்துறை அனுமதி மறுத்தது.
சேலத் தடைக்கு பின்னர், புதுச்சேரியைத் தேர்வு செய்த தவெக, டிசம்பர் 5-ஆம் தேதி ஒன்பது இடங்களில் சாலைவலம் மற்றும் இரண்டு பொதுக்கூட்டங்கள் நடத்த முன்வந்தது. நவம்பர் 26-ஆம் தேதி இதற்கான அனுமதிக்காக புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கரூர் சம்பவம் போன்ற நிகழ்வுகள் ஏற்படாது என்ற உறுதிமொழி அளித்திருந்தாலும், நகர்வலத்திற்கான அனுமதி வழங்க முடியாது, பொதுக்கூட்டத்திற்கே அனுமதி வழங்க இயலும் என காவல்துறை தெரிவித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதனைத் தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர், கடந்த ஒரு வாரமாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து நகர்வலத்திற்கான அனுமதியைப் பெற தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். ஆனால், புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரம், “பொதுக்கூட்டம் நடத்தலாம், நகர்வலம் அனுமதி இல்லை” என்பதில் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்நிலையில், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை மீண்டும் சந்தித்து நகர்வலம் அனுமதியை கோரினார். முதலமைச்சர், காவல்துறையின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டே முடிவு எடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டை பகிர்ந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பில் சட்டப்பேரவை சபாநாயகர் செல்வமும் உடன் இருந்தார்.
சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த ஆனந்திடம் செய்தியாளர்கள் விஜயின் வருகை குறித்து கேட்டபோது, எந்த பதிலும் அளிக்காமல் அவர் வாகனத்தில் ஏறிச் சென்றது கவனத்தைக் குவித்தது.
















