வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது சென்னைக்கு சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக பலவீனமடைந்தது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மழை தீவிரம் இன்று இரவு முதல் குறையக்கூடும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
எனினும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை பெய்ய வாய்ப்பு நீடிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இன்று மழை ஏற்படலாம் எனவும், கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் எண்ணூரில் மட்டும் 50 செ.மீ. அளவிற்கு மழை பதிவாகியுள்ளதாகவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
















