திங்கட்கிழமை தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக, திமுக எம்.பிக்கள் கூட்டம் சென்னையில் முதலமைச்சரும், கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில், கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.
அப்போது, நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் உரிமைக் குரலாக ஒழிக்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஸ்டாலின் எடுத்துரைத்தார். மேலும், இந்தக் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, மாநில உரிமைகளை மதிக்காமலும், போதிய நிதியை வழங்காமலும் தமிழ்நாட்டை வஞ்சிப்பதோடு, மத்திய-மாநில உறவில் கருப்பு அத்தியாயத்தை மத்திய பாஜக அரசு உருவாக்கியுள்ளதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ரயில் திட்டங்களிலும், நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதற்கு கண்டனம். கோவை, மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க பிரதமர் நேரில் தலையிட வேண்டும். கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் மதுரை பன்னாட்டு விமான நிலையத் திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்.
கலைஞர் பல்கலைக் கழகச் சட்டமுன்வடிவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவும், ஆளுநருக்குக் கால நிர்ணயம் செய்யவும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.
செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திட வேண்டும். நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். பள்ளி கல்விக்கான சமக்ர சிக்ஷா நிதியை உடனே விடுவிக்க வேண்டும். மத்திய அரசின் நான்கு தொழிலாளர் சட்டங்களால் தொழிலாளர்களின் உரிமை பாதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.















