தங்களது அதிகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியுமா என்பது உள்ளிட்ட 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றம் விளக்கம் அளிக்கும்படி குடியரசுத் தலைவர் கோரியிருந்தார். அதுகுறித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விரிவான விசாரணை நடத்தியது. அதன் தீர்ப்பை நீதிபதிகள் இன்று வெளியிட்டனர்.
குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களின் செயல்பாடுகளை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது என்றும், சட்ட மசோதாக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடு விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மசோதாக்களை நீண்ட காலம் காரணமின்றி ஆளுநர்கள் கிடப்பில்போட்டால், மாநில அரசுகள் நீதிமன்றத்தை நாடலாம். அதுகுறித்து விரைந்து முடிவெடுக்க ஆளுநரை கேட்டுக்கொள்ளலாமே தவிர, நீதிமன்றம் உத்தரவிட முடியாது. எனவே, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு, குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதித்திருப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் நீதிபதிகள் கூறினர்.
அரசமைப்பு சட்டம் 200ன்படி ஆளுநர்களுக்கு 3 அதிகாரங்கள் தான் உள்ளது. அதாவது, சட்டமன்றங்கள் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கலாம் அல்லது உரிய காரணங்களைக் கூறி நிறுத்திவைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகப் பரிந்துரைக்கலாம். காரணம் சொல்லாமல் எந்த சட்ட மசோதாவையும் நிறுத்திவைக்கும் 4வது அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

















