தென்காசி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையின் தாக்கம் குற்றாலம் முழுவதும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து திடீரென உயர்ந்துள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலைக்கு மலையணிந்து செல்கிற பக்தர்கள் அதிக அளவில் அருவிகளுக்கு திரள்வதையும் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்துள்ளது.
கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால், சபரிமலை பக்தர்கள் குற்றாலம் வழியாக வந்து அருவிகளில் நீராடிச் செல்லும் வழக்கம் உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக குற்றாலம் சுற்றுப்பகுதிகள் முழுவதும் மக்கள் நெரிசல் அதிகரித்திருந்தது. இந்நிலையில், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை தீவிரமடைந்ததால், குற்றால அருவிகளில் நீரின் அளவு கணிசமாக உயர்ந்து வருகிறது. அதிகப்படியான நீர்வரத்து தொடர்ந்து பதிவாகி வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி நிர்வாகம் தற்காலிகத் தடை அறிவித்துள்ளது. அதிகாரிகள் அருவிகளுக்கு வரும் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாகவே, சென்னை வானிலை மையம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதுடன், திருநெல்வேலி மலைப்பகுதிகளில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



















