சென்னையில் புதிய பொழுதுபோக்கு பூங்காவாக உருவாகியுள்ள வொண்டர்லா, தனது சேவையை டிசம்பர் 2ஆம் தேதி பொதுமக்களுக்கு திறக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. வொண்டர்லா நிறுவனத்தின் செயல் தலைவர் அருண் சிட்டிலப்பிள்ளி, தீரன் சௌத்ரி, அஜி கிருஷ்ணன் மற்றும் பூங்கா தலைவர் வைஷாக் ரவீந்திரன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பெருமளவு முதலீட்டில் அமைந்த புதிய பூங்கா
பழைய மகாபலிபுரம் சாலையில் 64 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில், சுமார் ரூ.611 கோடி முதலீட்டில் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. தினமும் சுமார் 6,500 பயணிகளை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பூங்காவில், மொத்தம் 43 உயர்தர சவாரிகள் உள்ளன. இதில் திரில் ரைடுகள், குடும்பத்திற்கான சவாரிகள், குழந்தைகளுக்கான அம்சங்கள் மற்றும் நீர்விளையாட்டு பகுதிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சிறப்பு சவாரிகள்
இந்தியாவில் முதல் முறையாக அறிமுகமாகும் மாபெரும் ரோலர் கோஸ்டர் உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்ப சவாரிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
பொலிகர், மாபில்லார்ட் இன்வெர்ட்டட் கோஸ்டர் ‘தஞ்சோரா’, ஸ்பின் மில், ஸ்கை ரயில் போன்ற உலகத் தரம் வாய்ந்த சவாரிகள் இந்த பூங்காவின் முக்கிய ஈர்ப்புகளாகக் கூறப்படுகின்றன.
உணவு, நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார அம்சங்கள்
சவாரிகளுடன் சேர்த்து, உணவகங்கள், லைவ் ஷோ போட்டிகள், சில்லறை கடைகள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழின் பாரம்பரியத்தை முன்னிறுத்தும் வகையில் தஞ்சாவூர் பொம்மை, மரப்பாச்சி பொம்மை போன்ற உள்ளூர் கைவினைப் பொருட்கள் விற்பனைக்கும் பிரத்யேக இடம் வழங்கப்பட்டுள்ளது.
டிக்கெட் விலை – முழு விவரம்
வார நாட்கள்: ₹1,489 (GST உட்பட)
வார இறுதிகள்: ₹1,789
திறப்பு நாள் – டிசம்பர் 2: ₹1,199 என்ற குறைந்த விலை சிறப்பு சலுகை
ஆன்லைன் முன்பதிவு: 10% தள்ளுபடி
மாணவர்கள் (கல்லூரி ID): 20% சலுகை
பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதி
பூங்கா முழுவதும் பாதுகாப்புக்கான சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு ஏற்ப எதிர்பாராத உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவர், செவிலியர்கள் போன்றோர் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
திறப்பு விழா
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 1ஆம் தேதி வொண்டர்லாவை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க உள்ளார். அடுத்த தினமான டிசம்பர் 2 முதல் பொதுமக்கள் பூங்காவைப் பயன்பாடுசெய்யலாம்.


















