அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சல் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மத்வி ஹித்மா உள்பட ஆறு நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படையினருடன் இணைந்த போலீசார் அப்பகுதியில் பெரிய அளவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். திடீரென அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினருக்கு மீது துப்பாக்கிச் சூடு தொடங்கியதால், பாதுகாப்பு படையினரும் தற்காப்பு நடவடிக்கையாக பதிலடி கொடுத்தனர்.
இந்த மோதலில் மத்வி ஹித்மா உள்பட 6 நக்சலைட்டுகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் இன்னும் பலர் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனுடன் தொடர்பாக சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திலும் பாதுகாப்பு படையினர் நடத்திய தனித்த என்கவுன்டரில் ஒரு நக்சலைட் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்த தொடர் நடவடிக்கைகள், நக்சல் இயக்கம் தீவிரமாக செயல்படும் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



















