மயிலாடுதுறை திருஇந்தளூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பரிமளரெங்கநாதர் கோயில் உள்ளது. இங்கு பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் ஐந்தாவது தலமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயில், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்யதேசமும் ஆகும். மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாள்களும் நடைபெறும் காவிரி துலா உற்சவம் கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றம் செய்யப்பட்டு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 7-ம் திருநாள் நிகழ்ச்சியாக இன்று உற்சவ மூர்த்திகளான சுகந்தவனநாதர் பெருமாளுக்கும், சுகந்தவனநாயகி தாயாருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில் பிரகாரத்தில் மாலை மாற்றும் வைபவம், ஊஞ்சல் உற்சவம், பின்னர் பட்டாச்சாரியார்கள் திருமாங்கல்யதாரணம் செய்து வைத்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பூரணாகுதி மகாதீபாரதனை செய்யப்பட்டு நலுங்கு உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். துலா உற்சவ பெருந்திருவிழாவின் 9-ஆம் திருநாளாக வருகின்ற 16 ஆம் தேதி காலை திருத்தேர் உற்சவமும், அன்று மதியம் காவேரி மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


















