தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் “தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி” திண்டுக்கல் மாவட்டம் குரும்பப்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது. இக்கண்காட்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழக மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள், சமூகநீதியையும் சமத்துவத்தையும் உறுதிசெய்யும் முன்னேற்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட சாதனைகள் புகைப்பட வடிவில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இந்தக் கண்காட்சியில், “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதி அளிக்கும் “விடியல் பயணத் திட்டம்”, அரசு பள்ளி மாணவர்களுக்கான “தமிழ்ப்புதல்வன் திட்டம்”, மாநிலம் முழுவதும் நடத்தப்படும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள், “கலைஞரின் வருமுன் காப்போம்” மருத்துவத் திட்டம், மகப்பேறு நிதியுதவி மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான பராமரிப்பு நிதியுதவி திட்டங்கள போன்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விரிவான புகைப்படங்கள், விளக்கங்கள் உடன் இடம் பெற்றிருந்தன.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள், குடிநீர், சாலை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பற்றிய புகைப்படங்களும் காண்பிக்கப்பட்டன. இப்புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள் ஆகியோர் திரளாக வந்திருந்தனர். அவர்கள் தமிழக அரசு மேற்கொண்டுள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்து அறிந்து பெருமகிழ்ச்சி தெரிவித்தனர்.
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், மக்கள் அரசின் செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டம் முழுவதும் இதுபோன்ற கண்காட்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது மக்கள் மற்றும் அரசுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்தி, தமிழக அரசு மக்களுடன் இணைந்து முன்னேறும் “நேர்மையான ஆட்சி – நம்பிக்கையின் பாதை” என்பதை உணர்த்துகிறது.














