இந்தியாவின் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரித்து, உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும் நோக்கத்துடன், கோவையில் இரு நாள் சிறப்பு கருத்தரங்கம் (Conclave) இன்று (நவம்பர் 13) மற்றும் நாளை (நவம்பர் 14) நடைபெற உள்ளது. ராணுவத் தளவாட உற்பத்தியில் குறும், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME) உள்ள வாய்ப்புகள் மற்றும் அதற்கான நடைமுறைகள் குறித்து விரிவான வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்தக் கருத்தரங்கின் முக்கிய இலக்காகும்.
கோவையில் உள்ள கொடிசியா ராணுவ புத்தாக்கம் மற்றும் அடல் இன்குபேஷன் சென்டர் சார்பில், இந்தியப் பாதுகாப்புத் துறை மற்றும் தர உறுதிப்பாட்டு இயக்ககம் (DGQA – Directorate General of Quality Assurance) இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்துகின்றன.
இந்திய ராணுவத் துறைக்குத் தேவையான தளவாடங்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதன் மூலம், ‘தற்சார்பு இந்தியா’ (Aatmanirbhar Bharat) திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதே இந்தக் கான்கிளேவின் மையக் கருத்தாகும்.இதில் இந்திய ராணுவத் தளவாடங்களை வாங்கும் துறை அதிகாரிகள், தர உறுதிப்பாட்டு இயக்குநரகப் பிரதிநிதிகள், சிறுதொழில் மேம்பாட்டு வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தனியார் தொழில்முனைவோர் கலந்துகொள்கின்றனர். அரசு ஜெம் போர்டல் (GeM Portal) பிரதிநிதி, வெளிப்படைத் தன்மை மற்றும் தொழில்துறை பங்களிப்புகள் குறித்து விளக்குதல். ராணுவத்துக்கான தளவாடங்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் வாங்கும் நடைமுறைகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உள்ள வாய்ப்புகள். தர உறுதிப்பாட்டு இயக்ககம் (DGQA): ராணுவத் தளவாட உற்பத்தியாளர்களாகப் பதிவு பெறும் நடைமுறைகள், தரநிலைகள் மற்றும் தேவையான ஆவணங்கள். இந்தியச் சிறுதொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) மற்றும் யூனியன் வங்கி: MSME மற்றும் ஸ்டார்ட்-அப்களுக்குக் கிடைக்கும் நிதி வாய்ப்புகள். வான்வெளித் தளவாட உற்பத்தித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு உள்ள வளர்ச்சி வாய்ப்புகள், தகுதி மற்றும் தொழில்நுட்ப தரச் சான்றிதழ் பெறுவது.
மேலும், ராணுவத் தளவாட உற்பத்திக்கான பதிவு நடைமுறைகள், அரசு அளிக்கும் ஆதரவுத் திட்டங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் ராணுவ அமைப்புகள் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) மற்றும் ரகசியக் காப்புக் கொள்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதம் நடைபெற உள்ளது.















