பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமகவுக்கு “மாம்பழ” சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தற்போதைய தலைவர் அன்புமணி இடையிலான மோதல் தீவிரமடைந்த நிலையில், கட்சியின் சின்ன உரிமை மீதான புதிய விவாதம் வெடித்துள்ளது.
8 மாதங்களாக நீடித்து வரும் உள்கட்சிக் கலகத்தில், அன்புமணி மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், பின்னர் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, தானே அந்த பொறுப்பை ஏற்றதாக அறிவித்திருந்தார். மேலும், செயல் தலைவராக தனது மகள் காந்திமதியை நியமித்தார்.
ஆனால், அன்புமணி தரப்போ இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், “மக்கள் உரிமை மீட்பு பயணம்” என்ற பெயரில் மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொதுச்சின்னம் கோரலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப பணிகள் நவம்பர் 12ஆம் தேதி தொடங்க உள்ளன.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில்,
“நான் தலைவராக உள்ள பாமகவுக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்க வேண்டும். சட்டசபை, நாடாளுமன்றம், உள்ளாட்சி என அனைத்து தேர்தல்களிலும் இதே சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். எனவே பாமகவின் அடையாளமாக மாம்பழ சின்னமே நிலைக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாம்பழ சின்னம் பாமகவின் பாரம்பரிய அடையாளமாகக் கருதப்படுவதால், அதை கைப்பற்றும் நோக்கில் ராமதாஸ் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக கட்சித் தளங்களில் பேசப்படுகிறது.
இதனால், அன்புமணி தரப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதில் அரசியல் வட்டாரங்களில் ஆவல் நிலவுகிறது. இரு தரப்பும் ஒரே சின்னத்தை கோரி தேர்தல் ஆணையத்தை நாடினால், அந்த சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.


















