டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஐ கடந்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை சுமார் 6 மணியளவில் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் கார் ஒன்று திடீரென வெடித்தது. வெடிப்பு சத்தம் முழு பகுதியில் கேட்கப்பட்டதுடன், அருகிலிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெடிப்பு தாக்கத்தால் அருகிலுள்ள கடைகள் மற்றும் கட்டிடங்களின் கண்ணாடிகளும் சிதறின.
வெடிப்பு நடந்தவுடன் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இது போன்ற பெரிய அளவிலான வெடிப்பு 2011-ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்ததிலிருந்து இப்போது தான் மீண்டும் நிகழ்ந்துள்ளது. இதனால் தலைநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அவசர ஆலோசனை நடத்தி முழு விவரங்களையும் கேட்டறிந்துள்ளார். மேலும், அமித்ஷா, டெல்லி காவல் ஆணையர் மற்றும் தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) அதிகாரிகளிடம் விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது சமூக வலைதளப் பதிவில் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளார்:
“தலைநகரிலேயே, அதுவும் அதிக பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் பகுதியில் குண்டு வெடிப்பு நடப்பது அதிர்ச்சியளிக்கிறது. உள்துறை மற்றும் உளவுத்துறைகளைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘மோடி–அமித்ஷா–அம்பானி’ கூட்டணிதான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.”
அதுடன், பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் இந்த வெடிப்பு சம்பவம் நடந்திருப்பதால், அதனை தேர்தலோடு தொடர்புபடுத்தி பலர் கேள்வி எழுப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருமாவளவன் மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், “பொதுமக்களை குறிவைத்து நடக்கும் இத்தகைய தீவிரவாத நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை. குற்றவாளிகள் ஒருவரும் தப்பிக்கக் கூடாது, அனைவரையும் கைது செய்ய வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.


















