புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள களமாவூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ரூ.223.06 கோடி மதிப்பில் முடிவடைந்த 577 திட்டங்களைத் திறந்து வைத்ததோடு, ரூ.201.70 கோடி மதிப்பில் 103 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.341.77 கோடி மதிப்பில் 43,993 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மொத்தம் ரூ.766.53 கோடி மதிப்பிலான திட்டங்கள் இந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டன.
நிகழ்ச்சியின் போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்றும் புதிய திட்டங்கள் மூலம் கிடைக்கும் பலன்களைப் பற்றிய காணொளி ஒளிபரப்பப்பட்டது.
பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “சோழர், பாண்டியர், முத்தரையர் ஆகிய மன்னர்களின் ஆட்சிக்கால வரலாற்று சிறப்புமிக்க புதுக்கோட்டை மண்ணில் உள்ள மக்களுடன் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் மொழிக்காக உயிர்நீத்த விராலிமலை சண்முகம் மற்றும் கீரனூர் முத்து ஆகிய இரு தியாகிகளை மறக்க முடியாது,” எனக் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது :
“நம் தாய் மொழியான தமிழை காக்க நஞ்சு குடித்து உயிர்தியாகம் செய்த சண்முகம் போன்றோர் நினைவாக கீரனூரில் முத்துசீரகம் அரங்கமும், திருச்சியில் ‘சண்முகம் பாலம்’ என்றும் பெயர் சூட்டியவர் முன்னாள் முதல்வர் கலைஞர்.
புதுக்கோட்டை மாவட்டம், 1974 ஜனவரி 1ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்டது என்பது பெருமை. தற்போதைய மாவட்ட பொறுப்பு அமைச்சர் ரகுபதி, அரசு திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்து வருகிறார். சமூகநீதிக்கான உறுதிமொழியுடன் அமைச்சர் மெய்யநாதனும் பணியாற்றுகிறார்.
அரசியல் லாபத்திற்காக பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு மக்கள் சரியான பதிலளிப்பார்கள். தமிழ்நாட்டில் சமூகநீதியை, பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தும் திராவிட மாடல் அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது,” எனவும் தெரிவித்தார்.
இறுதியாக, வாக்காளர்களை நோக்கி முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என சரிபாருங்கள்; உங்கள் வாக்குச்சாவடிகளில் போலி வாக்காளர்கள் இல்லையா என உறுதி செய்யுங்கள்,” என வலியுறுத்தினார்.

















