பிகார் சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6 அன்று 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் நடைபெற்றது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததாகவும், எந்த இடத்திலும் மீண்டும் வாக்குப்பதிவு தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சமஸ்திபூர் தொகுதியைச் சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாம்பவி சவுத்ரி வாக்களித்தபின் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதால் சர்ச்சை எழுந்தது. காரணம் – அவரின் இரு கைகளிலும் வாக்கு மை அடையாளம் தென்பட்டது.
அவர் ஊடகங்களுடன் பேசியபோது, முதலில் வலது கையை உயர்த்தி மை அடையாளத்தை காட்டினார். சில நொடிகளுக்குப் பிறகு, இடது கையிலும் அதேபோல் மை அடையாளம் இருப்பது காணப்பட்டது. இதனால் இணையத்தில் பல்வேறு ஊகங்களும் கருத்துகளும் எழுந்தன. சிலர் இது “இருமுறை வாக்களித்தாரா?” என கேள்வி எழுப்பினர்.
இதற்கு விளக்கம் அளித்த ஷாம்பவி சவுத்ரி, “வாக்குச்சாவடி பணியாளர் தவறுதலாக என் வலது கையில் மை பூசிவிட்டார். பின்னர் தலைமை அதிகாரி, நடைமுறைக்கு இணங்க இடது கையிலும் மை இடுமாறு கூறினார். அதனால் இரண்டு கைகளிலும் மை அடையாளம் உள்ளது. இது ஒரு நடைமுறை பிழை மட்டுமே, எந்த விதமான தவறும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
பாட்னா மாவட்ட நிர்வாகமும் இதுகுறித்து விளக்கம் அளித்து, “அந்த வாக்குச்சாவடியில் பணியாற்றிய அதிகாரி தவறுதலாக வலது கையில் மை அடையாளம் வைத்தார். பின்னர் நடைமுறைக்கேற்ப இடது கையிலும் மை இடப்பட்டது. இது ஒரு நிர்வாகப் பிழை, இதிலே எந்த விதமான முறைகேடும் இல்லை” என தெரிவித்துள்ளது.
இதனால், இரு கைகளிலும் மை இருந்த புகைப்படம் அரசியல் சர்ச்சையாய் மாறியிருந்தாலும், தேர்தல் அதிகாரிகளின் விளக்கத்தால் நிலைமை தெளிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

















