சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படம் மறுவெளியீட்டிற்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாயகன் படம் நேற்று ரீரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் நீதிபதி அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் “நாயகன்” என்ற திரைப்படம் 1987 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இதில் தென்பாண்டி சீமையிலே பாடலையும் இளையராஜா பாடியுள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற “நீங்கள் நல்லவரா கெட்டவரா” என்ற வசனம் மிகவும் பிரபலம்! நாயகன் படத்தில் சரண்யா அறிமுகமானார். இதில் ஜனகராஜ், பூவிழி வாசலிலே கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் அப்போதைய காலகட்டத்தில் தமிழகத்தில் 214 நாட்கள் ஓடியது. இந்த நிலையில் அண்மைக்காலமாக 1980, 90-களில் வெளியான படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அன்பே வா, வசந்த மாளிகை, கேப்டன் பிரபாகரன், மனிதன் வரிசையில் நாயகன் படம் நேற்றைய தினம் மறுவெளியீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இதை எதிர்த்து எஸ்.ஆர்.ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ஆர்.ராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்துள்ளார்.
அதில் “நாயகன் திரைப்படத்தை எனது நிறுவனம், ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து படம் வெளியிடும் உரிமையை கடந்த 2023 ஆம் ஆண்டு பெற்றுவிட்டோம். இதை மறைத்து வி.எஸ்.ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் “நாயகன்” திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது முறைகேடான நடவடிக்கை. எனவே நாயகன் திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும். நேற்று படத்திற்கு வசூலான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி செந்தில் குமார் முன்பு மனுதாரர் தரப்பு முறையீடு செய்யப்பட்டது. மனுவை இன்று விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் இன்று இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நீதிபதி, “இந்த படத்தை நான் 16 முறை பார்த்திருக்கிறேன். இதன் காட்சிகளை என்னால் இப்போது கூட விவரிக்க முடியும். எனவே நாயகன் திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தடை விதிக்க முடியாது என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்















