சென்னை:
மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரசாரப் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தீவிரமான உரையாற்றி திமுகவினரை கடுமையாக விமர்சித்தார்.
அவர் உரையில் கூறியதாவது :
“நாங்கள் மக்கள் இயக்கத்திலிருந்து வளர்ந்து ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி மக்களிடம் நேரடியாக சென்று பிரசாரம் செய்து வருகிறோம். எங்கள் தலைவர் மே மாதம் முழுவதும் தன் வேலைவிடத்திலிருந்து விலகி, மக்கள் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தார். இந்தியாவில் அதிக சம்பளமுள்ள வேலையை விட்டுவிட்டு மக்களுக்காக வந்தவர் அவர்.
இன்னும் தமிழ்நாட்டில் பலரும் குடிசைகளில் வாழ்வதைப் பார்த்து வேதனைப்பட்டதால்தான் மாற்றத்துக்கான அரசியலை தொடங்கினார். ஆனால் இன்றைக்கு குடிசைகள் அகற்றப்பட்டு பெரிய மாளிகைகள் கட்டப்படுகின்றன. இதை மாற்றுவதே எங்கள் நோக்கம்,” என்றார்.
அதையடுத்து திமுக குறித்து பேசும் போது, “நான் திமுகவுக்கு 10 ஆண்டுகள் வேலை செய்ததற்காக தமிழக மக்களிடம் பாவமன்னிப்பு கேட்கிறேன். எதிர்க்கட்சியாக இருந்தபோது அவர்கள் நல்லவர்களாகத் தோன்றினார்கள். ஆனால் இன்று அரசியலில் ஒருவரை அழிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்துகிறார்கள்.
நம் தலைவர் தேர்தல் நாளில் கருப்பு–சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனாலும் அந்தக் கட்சியினருக்கு நன்றியுணர்வு இல்லை. பொதுச் செயலாளர் ஓடிவிட்டாராம், நிர்மல் குமார் ஓடிவிட்டாராம் — யார் ஓடியது? உங்கள் அப்பா கைது செய்யப்பட்டபோது நீங்கள் ஓடினீர்களே! கலைஞர் கைது செய்யப்படும் போது அவரது மகனும் ஓடினார். வரலாறு பற்றி பேச ஆரம்பித்தால் தாங்க முடியாது,” என்று கடுமையாகச் செருக்கு காட்டினார்.















