சென்னை: “அரசின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் கொடுமை, திமுக ஆட்சியில்தான் நடக்கிறது,” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“மத்திய கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் இடைநிறுத்தல் விகிதம் கடந்த ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது. இதனால் கல்வித் துறையில் தமிழகத்தின் தரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
2020–21 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளிகளில் இடைநிறுத்தல் விகிதம் 0.6 சதவிகிதம் இருந்தது. அது தற்போது 2024–25 கல்வியாண்டில் 2.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோல், உயர்நிலைப் பள்ளிகளில் இது 6.4 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பெறும் மும்மொழிக் கல்வி போன்ற வாய்ப்புகள், ஏழை மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. மேலும், மாணவர்களிடையேயான சாதி மோதல்கள் தமிழக அரசுப் பள்ளிகளில் மட்டுமே நிகழ்வதாகும்.
கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட பல இடங்களில் அரசுப் பள்ளிகள் கட்டடமின்றி மரத்தடியில் வகுப்புகள் நடத்தும் நிலை உருவாகியுள்ளது. திமுக ஆதரவாளர்கள் கட்டிய தரமற்ற கட்டிடங்கள் இடிந்து விழுவதும் பள்ளிக் கல்வி அமைப்பை மோசமாக பாதித்துள்ளது.
இதையெல்லாம் மீறி, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது விளம்பர நிகழ்ச்சிகளுக்காக அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் 3,671 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகிறார். இதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் 2.39 லட்சம் பேர் மட்டுமே இருக்கையில், தனியார் பள்ளிகளில் அதற்கும் இரு மடங்காக 5.26 லட்சம் மாணவர்கள் சேர்கின்றனர்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை இவ்வாறு சீர்குலைந்திருந்தும், திமுக அரசு வீண் விளம்பரங்களிலும், பாராட்டு விழாக்களிலும் காலம் கழிப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார்.”

















