கோவை : “’சார்’ என்றாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி உள்ளது,” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை வரவேற்க வந்திருந்த நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் பேசியபோது, “தமிழகத்திலிருந்து ஒருவரை பிரதமர் மோடி துணை ஜனாதிபதியாக நியமித்திருப்பது பெருமைக்குரியது. புயல் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை கருத்தில் கொண்டு, பாஜக சார்பில் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் உதவிக்குத் தயாராக உள்ளனர்,” என்றார்.
அதனைத் தொடர்ந்து, திமுகவை குறிவைத்து அவர் தெரிவித்ததாவது: “அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் முதல் ‘சார்’ என்ற சொல்லுக்கே திமுகவுக்கு அலர்ஜி. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடக்கும்போது, திமுக சேர்த்துள்ள போலி வாக்காளர்கள் நீக்கப்படும் என்பதால் அவர்கள் பதட்டத்தில் உள்ளனர். கொளத்தூர் தொகுதியில் மட்டும் சுமார் 9 ஆயிரம் கூடுதல் வாக்குகள் உள்ளன என்பது கவலைக்குரியது,” என்றார்.
மேலும், “வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தமிழக அரசு அதிகாரிகள் தாமே மேற்கொள்கிறார்கள். அதற்குப் பிறகும் திமுக ஏன் அச்சப்படுகின்றது? வரவிருக்கும் தேர்தலில் தோல்வி பயம் காரணமாகவே திமுக கூட்டணிக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது,” என நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.
















