சென்னை :
சென்னை புழுதிவாக்கம் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பேனா மை கொட்டியதற்காக 5ஆம் வகுப்பு மாணவி ஒருவரை தலைமை ஆசிரியர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த பள்ளியில் 11 வயது சிறுமி ஒருவர் வகுப்பறையில் பேனாவைத் திறந்தபோது மை தற்செயலாக சட்டை, பாவாடை மற்றும் தரையில் கொட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர், தரையைத் துடைக்கும் கட்டையால் சிறுமியை கடுமையாக அடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் சிறுமி தீவிர காயமடைந்த நிலையில், தற்போது கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து இதுவரை காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்தச் சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“சிறுமியின் நிலைமை மிகுந்த கவலைக்குரியது. தலைமை ஆசிரியர் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமி ஆதித்தமிழர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் காவல்துறை நடவடிக்கையில் பாகுபாடு காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இது சமூகநீதி எனும் பெயரில் நடக்கும் அநீதி” என அவர் தெரிவித்துள்ளார்.
சீமான் மேலும்,
“அரசுப்பள்ளியில் குழந்தை மீதான வன்முறையை கடுமையாக எதிர்த்து, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரை உடனடியாக இடைநீக்கம் செய்து, வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை மற்றும் காவல்துறை விரைவான விசாரணை மேற்கொண்டு, சிறுமிக்கு நீதியளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















