காவிரி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயரும் நிலையில், தமிழ்நாட்டின் காவிரி பாயும் 11 மாவட்டங்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேட்டூர் அணையில் அதிகளவில் நீர் வரத்து பதிவாகி வருவதால், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனுடன், வைகை அணை முழு கொள்ளளவுக்கு நெருக்கமாக இருப்பதாகவும், இதனை முன்னிட்டு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்களிலும் சில பகுதிகள் வெள்ள அபாயப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. நீர்வள ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், கரையோரப் பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாநில அரசுகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

















